என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் 28 ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம்
- தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது. இதனால் நாள்தோறும் மின்சார ரெயில்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக, தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரெயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இது ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை, மூர்மார்க்கெட், கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. புதிய சார்ஜிங் மையம் பொறுத்தவரையில் சென்னை முழுவதும் உள்ள 28 முக்கிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'பயணிகள் வசதிக்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட சில ரெயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். விரைவில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது' என்றனர்.






