காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் - சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தேர்தல் நடைபெற்றுள்ள மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின் காவிரி மேலாண்மை கூட்டம் கூட்டப்பட வேண்டும என சிபிஐஎம் வலியுறுத்தல்.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் - சிபிஐ(எம்) வலியுறுத்தல்
Published on

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் அக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இல்லாத சூழ்நிலையில் இக்கூட்டம் கூட்டப்படுவதால் இதனை ஒத்திவைக்க வேண்டும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட அடிப்படையில், இந்த நீர் முறையாக மாதவாரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும், காவிரி தொடர்பாக முன்னுக்கு வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் ஐம்பதாவது கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் என்பது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்பானவை. தற்பொழுது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இல்லாத சூழ்நிலையில், இந்த கூட்டம் நடத்துவது பொருத்தமாக இருக்காது. மேலும், 29ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தின் பொருள் என்ன என்பதும் தெரிவிக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இல்லாத சூழ்நிலையிலும், என்ன பொருள் என்பது முன்கூட்டி அறிவிக்கப்படாத நிலையிலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரிகள் என்ன கருத்தை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்க முடியும்.

கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் அரசின் ஆலோசனையை பெற்று கருத்துக்களை தெரிவிப்பதுதான் வழக்கம்.

எனவே, ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் பொறுப்பேற்ற பிறகு தேதி நிச்சயித்து காவிரி மேலாண்மை கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com