தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கையாக ரூ.189 கோடி பணம், தங்கம், பொருட்கள் பறிமுதல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ரூ.189 கோடி மதிப்புள்ள பணம், தங்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கையாக ரூ.189 கோடி பணம், தங்கம், பொருட்கள் பறிமுதல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
Published on

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகம் முழுவதும் 24 மணி நேர வாகன சோதனை தொடர்கிறது. பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக இதுவரை ரூ.41 கோடி ரொக்கம் உள்பட ரூ.189 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சீபுரத்தில் திருமணத்துக்கு பட்டுப்புடவை வாங்கச் சென்றவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரித்து உரிய தீர்வு காணப்படும். பணம் பறிமுதல் தொடர்பாக அவ்வப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,262 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 16 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன.

த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் அதிகாரி ஒப்புதல் வழங்க கேட்டு அக்கட்சியின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் என்னை சந்தித்தார். விஜய் பிரசாரம் செய்யும் தொகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து பொது பார்வையாளர்களாக 42 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், போலீஸ் பார்வையாளர்களாக 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் சென்றுள்ளனர்.

234 தொகுதிகளுக்குமான வேட்பு மனு தாக்கல் 30-ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான 8 நாட்களில், 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதில் எப்போதும் உள்ள நடைமுறையே பின்பற்றப்படும். அதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும்.

தமிழகம் வந்துள்ள 50 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு விழிப்புணர்வு அணிவகுப்பு உள்ளிட்ட நடைமுறைகளை செய்து வருகின்றனர். அடுத்ததாக 250 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் விரைவில் தமிழகம் வருவார்கள்.

பதற்றமான வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை, வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பிறகு, போட்டியிடும் வேட்பாளர்களை கொண்டு கணக்கிடப்படும். அவை ஏப்ரல் 6-ந்தேதிக்கு பிறகு கண்டறியப்படும். அவ்வாறு கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தனியாக நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப்காஸ்டிங் முறை மூலம் நேரடியாக கண்காணிக்கும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தபிறகு, தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி பறக்கும் படையினரின் எண்ணிக்கை உயர்த்தப்படும். 26-ந்தேதியுடன் (அதாவது நேற்று) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் வாய்ப்பு நிறைவடைந்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் துணைப்பட்டியல் தயாரித்து வெளியிடப்படும். 26-ந்தேதிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள், தேர்தல் முடிந்த பிறகு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தேர்தல் நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உரிமம் உள்ள 20 ஆயிரத்து 57 கைத்துப்பாக்கிகளில் 16 ஆயிரத்து 835 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com