ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் போலீசாரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

ஈரோடு கலெக்டர் அலுவலகம் பெருந்துறை சாலையில் இயங்கி வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் பழைய கட்டிடத்தில் 7 தளங்களும், புதிய கட்டிடத்தில் 7 தளங்களும் உள்ளன. இங்கு பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

எப்போதும் ஈரோடு கலெக்டர் அலுவலகம் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காட்சியளிக்கும் குறிப்பாக திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் முடியும் வரை கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக இயங்கி வரும்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலக இமெயிலில் மர்ம நபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் கொடுத்து மேல் அனுப்பியிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் விரைந்து வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர் வெடிகுண்டு தடுப்பு நாய் பவானியும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

பழைய கட்டிடத்தில் உள்ள கூட்டரங்கம், பதிவேடுகள் பாதுகாப்பு அறை, கலெக்டர் முகாம் அலுவலகம், பழைய கட்டிடத்தில் உள்ள அனைத்து அலுவலகம் புதிய கட்டிடத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதி புதிய கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கம் மாவட்ட வருவாய் நேர்முக உதவியாளர் அலுவலகம் என அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் போலீசாரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காட்சியளித்து வருகிறது. இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்திற்குள் செல்லாமல் வெளியே பரபரப்புடன் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து போலீசாரும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com