

தேனி மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் முந்தல் கிராமம் அமைந்துள்ளது. போடி மெட்டு மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் வழியாகத்தான் கேரள மாநிலம் மூணாறு வழியாக இடுக்கி மாவட்டத்துக்கு தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதுடன் மதுவிலக்கு சோதனைச்சாவடி, குடியிருப்புகள், கடைகள் உள்ளன. நேற்று மாலை முதல் இப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் இங்குள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. சோதனைச்சாவடி அருகே இருந்த கடைகள், குடியிருப்புகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன.
ஒரு சில கடைகளில் இருந்த பொருட்களும் தூக்கி வீசப்பட்டு அடையாளம் தெரியாமல் மாறி விட்டது. மேற்கூரைகள் காற்றில் பறந்து விழுந்ததால் அந்த வழியாக வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். மேலும் முந்தல் கிராமம் முழுவதும் இருளில் மூழ்கியது. சோதனைச்சாவடி முன்பு வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளும் காற்றில் பறந்து விழுந்தன. இது குறித்து அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இரவு வரை அங்கிருந்த கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காற்றில் பறந்து சென்ற பொருட்களை தேடிச்சென்று சாலையோரம் வைத்து பாதுகாத்தனர். இன்று காலையிலும் இதே நிலை தொடர்ந்ததால் வீட்டில் இருந்த பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கொட்டக்குடி, குரங்கணி, முந்தல், கிராமங்களிலும் பலத்த சூறாவளி காற்றுக்கு மரங்கள் முறிந்து குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. திடீர் மழை பெய்தால் ஒதுங்குவதற்கு கூட தங்களுக்கு இடம் இல்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி வைத்து மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.