

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி ஜல்லி ஊர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகன் முருகன் (21). இவர் அவ்வப்போது குடித்துவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (36) என்பவர் முருகனின் தாயாரான விஜயாவிடம் உனது மகன் எப்போதும் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி திரிகிறான். எனவே அவனை கண்டித்து வையுங்கள் எனக் கூறியுள்ளார். இதனை அறிந்த முருகன் ராமதாஸ் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமதாஸ் தனது பைக்கில் சென்றதை நோட்டமிட்ட முருகன் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள நெற்களஞ்சியத்தில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார்.
முருகன் அந்த பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்து ராமதாஸ் கந்திலி போலீசில் புகார் செய்தார். போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.