சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதைப் பெற்றார் அழகுமீனா ஐஏஎஸ்!

சிறந்த காவல் ஆணையர் விருதினை முன்னாள் ஆவடி காவல் ஆணையர் கே. சங்கர் பெற்றுக்கொண்டார்.
சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதைப் பெற்றார் அழகுமீனா!
Published on

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நேற்றும், இன்றும் (ஜூன்.29,30) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாடு நேற்று முதலமைச்சர் விஜய்யின் உரையுடன் தொடங்கியது. பிற்பகல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.

இரண்டாம் நாளான இன்று முற்பகலில் காவல்துறை அதிகாரிகள் மாநாடும், பிற்பகலில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடும் நடைபெற்றது.

இம்மாநாடு நடைபெற்ற இரண்டு நாட்களிலும் விஜய், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகள், சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென்றும்,

உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றி மக்களுக்கு பாரபட்சமற்ற, துரிதமான சேவையாற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

இம்மாநாட்டின் நிறைவாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விருதுகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

அதன்படி சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், 2024-25ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகள் முன்னாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.என். பூங்கொடி, முன்னாள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர், முன்னாள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஐ.எஸ். மெர்சி ரம்யா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை திறம்படச் செயல்படுத்தியமைக்காக 2023-ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக 2024-ஆம் ஆண்டிற்கான விருதினை முன்னாள் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,

2025-ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. சாந்தி, முன்னாள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு. சந்திரகலா, முன்னாள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பொதுத்துறை சார்பில் முதலமைச்சரின் குறைதீர்ப்புப் பிரிவின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டமைக்காக 2025-26ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரா. அழகுமீனா பெற்றார்.

பொதுத்துறை சார்பில் முதலமைச்சரின் குறைதீர்ப்புப் பிரிவின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டமைக்காக சிறந்த காவல் ஆணையருக்கான 2025-26 ஆம் ஆண்டிற்கான விருதினை முன்னாள் ஆவடி காவல் ஆணையர் கே. சங்கர் பெற்றுக்கொண்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் சிறப்பாகச் செயலாற்றியமைக்காக 2025-26ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். சரவணன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர், முன்னாள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி, ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான விருதுகளை முன்னாள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வா.வெ. சாய் பிரணீத்,

முன்னாள் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம், முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெ. தங்கதுரை, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஸ்டாலின், ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், துறைச் செயலாளர்கள், காவல்துறை, வனத்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com