

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அவலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 82 மில்லி மீட்டர் கனமழை பதிவாகி உள்ளது. மேலும் மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அப்பர் பவானி 42, போர்த்திமுந்த் –34, தேவாலா 28, எமரால்டு 24, சேரங்கோடு 22, அப்பர் கூடலூர் 20, கூடலூர் –19, பந்தலூர் 16.6 மழை பதிவாகியுள்ளது.
ஊட்டி, நடுவட்டம், கிளென்மார்கன், பார்சன்ஸ் வேலி, குந்தா, குன்னூர், பர்லியார், கேத்தி, கோத்தகிரி, கோடநாடு, கீழ்கோத்தகிரி, சேருமுள்ளி, பாடந்தொரை, ஓவேலி உள்ளிட்ட பகுதிகளில் தற்போதும் லேசான மழை பெய்து வருகிறது.
அதே நேரத்தில் கல்லட்டி, மசினகுடி, கெத்தை, கிண்ணக்கொரை மற்றும் பாலகொலா பகுதிகளில் மழை பெய்யவில்லை.
மேலும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாய பாசனத்திற்கும் ஆதாரமாக விளங்கி வரும் அணைகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்து, நீராதாரங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன. குறிப்பாக கனமழை காரணமாக அவலாஞ்சி அணையில் தண்ணீர் நிரம்பி வருகிறது.
தொடர்ச்சியான மழையால் அவலாஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் பசுமை போர்வை போர்த்தியதுபோல் காட்சியளிக்கின்றன. அவ்வப்போது சாரல் மழை, அடர்ந்த பனிமூட்டம் மற்றும் இதமான குளிர் நிலவுவதால் அப்பகுதியின் இயற்கை அழகு ரம்மியமாக உள்ளது.
இந்நிலையில் மலைப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.