

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சூசையபுரம் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளன. வனப்பகுதி போல் காட்சியளிக்கும் இந்த கல்குவாரியில் சிறுத்தைகள் குட்டியுடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக பதுங்கி இருக்கும் சிறுத்தைகள் இரவு நேரத்தில் கல்குவாரியிலிருந்து வெளியேறி அருகே உள்ள பள்ளத்தின் வழியாக விவசாய தோட்டங்களில் நுழைந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு கோழி நாய் உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சூசையபுரம் பகுதியில் டென்னிஸ் என்பவரது விவசாய தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்று வீட்டின் முன்பிருந்த நாயை கவி சென்றது. இதைப்போல் பசுவன்னா என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாட்டை சிறுத்தை கவி சென்றது.
தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து வந்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை சோதித்து பார்த்து அது சிறுத்தை உடையது என்று உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து சிறுத்தைகள் பதுங்கி உள்ள கல்குவாரி மற்றும் அப்ப ஊரில் உள்ள விவசாய தோட்டம் என 2 இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் இரவு நேரங்களில் அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, கூண்டு வைத்து பிடிப்பதற்காக உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்சும் பணிக்காக செல்லும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இரவு நேரங்களில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்க கூடாது என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.