

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த நீர்வீழ்ச்சியில் தமிழில் புன்னகை மன்னன், ராவணன் போன்ற திரைப்படங்களும், மலையாளத்தில் பல்வேறு படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற இந்த இடத்தைப் பார்க்க சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
கடந்த மாதங்களில் தண்ணீர் வற்றி போய் காணப்பட்டதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக மழை பெய்து வருவதால் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இப்பகுதியில் பெய்யும் மழையானது தமிழக வனப்பகுதி வழியாக கேரளா பகுதிக்கு செல்கிறது. அதனால் அங்கு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தற்போது தண்ணீர் அதிகமாக வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.