

சித்திரை மாதம் தொடங்கிய பிறகு அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மூன்றாவது நாள் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை என்றால் குறையாத செல்வம் என அர்த்தம் எனவேதான் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம் பெருகும் என மக்கள் நம்புகின்றனர்.
அட்சய திருதியை செல்வம் மற்றும் மங்களத்தை அள்ளித்தரும் நாளாகக் கருதப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.49 முதல் நாளை (திங்கட்கிழமை) காலை 7.27 மணி வரை அட்சய திருதியை திதி உள்ளது.
விடுமுறை நாள் என்றாலும் அட்சய திருதியை என்பதால் சென்னை நகை கடைகளில் மக்கள் இன்று தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டினர். பொதுவாக நகைகளை, தங்க நாணயங்களை அதிகமாக வாங்குவார்கள். இதற்காக கடைகளில் ½ கிராம், 1 கிராம், 2 கிராம் என தனித்தனியாக தங்க நாணயங்களை விற்பனை செய்யவே தனி தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தங்கம் விலை என்னதான் ஏறினாலும், ஒரு குண்டுமணி அளவுக்காவது வாங்க வேண்டும் என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருந்தனர். இதனால், வாடிக்கையாளர்களை கவர, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்தன.
சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கின. அத்துடன், புதிய புதிய டிசைன்களில் நகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், 10 நாட்களுக்கு முன்தாகவே முன்பதிவும் தொடங்கப்பட்டது.
எனினும் இந்த ஆண்டு அட்சய திருதியையில் தங்கம் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என நகை கடை உரிமையாளர்கள் கூறினர்.
இதுபற்றி நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், ‘கடந்த 2024-ம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று தங்கம் ஒரு பவுன் ரூ.53,280-க்கும், கடந்த 2025-ம் ஆண்டு ஒரு பவுன் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனையாகிறது. இது கடந்த ஆண்டினை விட 2 மடங்கு அதிகமாகும்.
பொதுமக்கள் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையிலும், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எண்ணி முதலீட்டு நோக்கத்தில் இந்த அட்சய திருதியை நாளில் அதிகளவு தங்கம் வாங்குவார்கள். ஆனால் இந்த முறை மக்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வம் சற்று குறைவாக உள்ளது என்றனர்.