வடசென்னையில் ஆவின் பால் வினியோகம் பாதிப்பு

பால் வினியோகஸ்தர்களுக்கு வழக்கம் போல் வரக்கூடிய பாலின் அளவு குறைந்துள்ளது.
வடசென்னையில் ஆவின் பால் வினியோகம் பாதிப்பு
Published on

சென்னை:

சென்னை மாதவரம் பால் பண்ணையில் இருந்து வடசென்னை பகுதி முழுவதும் ஆவின் பால் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆவின் பால் வடசென்னை பகுதியில் குறைவாக வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை.

கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுவதால் பொதுமக்கள் தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று ஆவின் பால் வினியோகம் வடசென்னை பகுதியில் கடுமையாக பாதித்துள்ளது. பெரம்பூர், திரு.வி.க. நகர், கொளத்தூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, மாதவரம், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

மிகக் குறைந்த அளவிலேயே பால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மதியம் வழங்கக்கூடிய பால் வினியோகமும் குறைந்து உள்ளது. கடைகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இன்று தட்டுப்பாடு மேலும் அதிகரித்தது.

பால் வினியோகஸ்தர்களுக்கு வழக்கம் போல் வரக்கூடிய பாலின் அளவு குறைந்துள்ளது. இதனால் கடைகளுக்கு குறைந்த அளவிலேயே பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மாதவரம் பால் பண்ணையில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு சரியான நடவடிக்கை எடுக்காமல் போனதே இந்த பாதிப்புக்கு காரணம் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

மாதவரம் பால் பண்ணையில் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்தது சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் எடுத்துள்ள அந்த ஒப்பந்ததாரருக்கு மாதவரம் பால்பண்ணையிலும் வழங்கப்பட்டது. அவரால் தேவையான தொழிலாளர்களை நியமிக்க முடியவில்லை. 50 பேர் செய்த பணிகளை 8 பேர் மட்டுமே தற்போது செய்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக பால் வினியோகம் பாதிக்கப்பட்டது. வினியோகஸ்தர்களுக்கு தாமதாக வருகிறது.

தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரி செய்ய ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இந்த பிரச்சினைக்கு இன்று தீர்வு காணாவிட்டால் நாளை வடசென்னை பகுதி முழுவதும் பால் வினியோகம் முடங்கும் ஆபத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com