திருச்சி அருகே நீச்சல் தெரிந்தும் விபரீதம் - கிணற்றில் குதித்த 9-ம் வகுப்பு மாணவர் திட்டில் மோதி மூழ்கி பலி

உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி அருகே நீச்சல் தெரிந்தும் விபரீதம் - கிணற்றில் குதித்த 9-ம் வகுப்பு மாணவர் திட்டில் மோதி மூழ்கி பலி
Published on

உப்பிலியபுரம்:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சி எஸ்.என்.புதூரைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர், கலைச்செல்வி தம்பதியினர். சந்திரசேகர் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தனுஷிக் (வயது 14) என்ற மகனும் தனுஷிகா (6) என்ற மகளும் இருந்தனர். தனுஷிக் துறையூர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

விடுமுறை நாளான நேற்று மாலை புதூரை ஒட்டியுள்ள பழனிவேல் ஆசிரியர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் தனுஷிக் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்தார். நீச்சல் தெரிந்த நிலையில் கிணற்றின் மேலே இருந்து குதித்த தனுஷிக், கிணற்றின் திட்டில் அடிபட்டு சுயநினைவை இழந்து கிணற்றில் மூழ்கினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் தனுஷிக் நீண்ட நேரமாகியும் மேலே வராததால் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் நிலைய அலுவலர் துரைசாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மூழ்கிய தனுஷிக் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு வேளையானதால் அப்பகுதியில் பிரகாசமான மின் விளக்குகள் ஒளிரூட்டப்பட்ட பின்னர், மீட்பு குழுவினர் கிணற்றில் மூழ்கி கயிறு மூலம் உடலை இறந்த நிலையில் மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை புதூர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ஒரே மகனை இழந்த பெற்றோர் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com