தமிழ்நாட்டில் 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடல்!

இன்னும் 88 குவாரிகளின் குவாரி பணியினை நிறுத்த மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடல்!
Published on

தமிழ்நாட்டில் தவெக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,.

“தமிழ்நாடு முழுவதும் கனிம வளத்துறை சார்பில் 2000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன.

இக்கல்குவாரிகளில் அரசு அனுமதி அளித்த அளவிற்கு அதிகமாக கல் வெட்டி எடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதேபோல, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், கல்குவாரிகளில் எந்த அளவு கற்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்த விதிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் கல்குவாரிகளை கண்காணிக்கும் சேஃப்டி மைன்ஸ் எனப்படும் கண்காணிப்பு குழுவினர் முறையாக கண்காணிக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

எனவே, தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற கல்குவாரிகளின் அந்தந்த மாவட்ட கனிமவளத்துறையினர் ஆய்வு செய்து, கல்குவாரிகளில் அரசிடம் பெறப்பட்ட அனுமதி ஆணைப்படி கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளாக வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுகின்றனவா, உரிய அனுமதியோடு கனிமங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பது உள்ளிட்ட அனைத்து இனங்களையும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் டி.கே. பிரபுவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சரால் கடந்த வாரத்தில் தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விதிகளை மீறி செயல்பட்டு வந்த கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அமைச்சரின் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு முழுவதும் கனிமவளத்துறை அதிகாரிகள் கடந்த 1 வாரமாக தீவிர சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் 431 கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டதில், 155 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 67 குவாரிகளின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 88 குவாரிகளின் குவாரி பணியினை நிறுத்த மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கனிமங்கள் எடுத்துச் செல்லப்படும் வாகனங்களை சோதனை செய்ததில், சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துசென்ற 469 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய சட்டவிதிகளின்படி அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்பட்டது, கனிமவளத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குபதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி குவார்ட்ஸ் கனிமம் வெட்டி எடுக்கப்பட்டது கனிமவளத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனிவரும் காலங்களில் சுரங்கம் மற்றும் குவாரி பணிகளானது ஒப்புதல் பெற்ற சுரங்க திட்டத்தின்படியும் மற்றும் குவாரி குத்தகை நிபந்தனைகள்படியும் குத்தகைதாரர்கள் குவாரிபணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குத்தகைகாலம் முடிவுற்று காலாவதியான குவாரிகள் மற்றும் தற்போது இயக்கத்தில் இல்லாத குவாரிகள் அல்லது அரசு மற்றும் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுத்துச்செல்வது கண்டறியும்பட்சத்தில் சட்டவிதிகளின்படி அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com