

ஈரான். அமெரிக்கா போர் காரணமாக வணிக கியாஸ் சிலிண்டர்கள் மீது மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது.
இதனால் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டன. மின்சார மற்றும் விறகு அடுப்புகளுக்கு மாறினார்கள். மேலும் ஓட்டல் உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டன. ஓட்டல்களில் சில உணவு பண்டங்கள் தயாரிப்பது நிறுத்தப்பட்டன.
டீக்கடைகளில் டீ விலை 10 ரூபாயில் இருந்து ரூ.15 ஆகவும் காபி விலை ரூ.20, 25 ரூபாய் என உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது. வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தனியாரிடம் அதிக விலை கொடுத்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் வணிக சிலிண்டர் 19 கிலோ விலை ரூ.3327 ஆக மத்திய அரசு உயர்த்தியது. தமிழக முழுவதும் வணிகப் பயன்பாட்டில் உள்ள பேக்கரிகள், இனிப்பு கடைகளிலும் விலை உயர்த்தப்பட்டது. வணிக சிலிண்டர் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் கூடியது.
இந்த நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையே போர் ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டருக்கான கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது. இது ஓட்டல், டீக்கடை தொழில் செய்யக் கூடியவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் கூட வணிக சிலிண்டர் விலை குறைக்காமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சுப்பு கூறியதாவது:-
வணிக சிலிண்டர் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. போருக்கு முன்னதாக 2000 ரூபாய்க்கு குறைவாக இருந்த சிலிண்டர் தற்போது ரூ.3500 வரை உயர்ந்துள்ளது. சிலிண்டர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் அதே நேரத்தில் விலையையும் குறைக்க வேண்டும். இந்த விலை உயர்வால் ஓட்டல் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலையை குறைப்பதற்கு வாய்ப்பில்லை. 10 சதவீதம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டது.
ஆனால் தற்போது சிலிண்டர் மட்டுமில்லாது ஓட்டல் தொழில் சார்ந்த அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பதால் இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், வடை, மதிய சாப்பாடு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது.
சிலிண்டர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் இனிமேல் ஓட்டல்களில் அனைத்து உணவு பொருட்களையும் தயாரித்து வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்று கியாஸ் சிலிண்டர் வினியோக நிறுவன உரி மையாளர் கூறும்போது, கடந்த 4 மாதமாக சிலிண்டர் விற்பனை பாதித்தது. வாடிக்கையாளர்கள் பலர் தனியார் சிலிண்டர் நிறுவனங்களுக்கு சென்று விட்டனர். மீண்டும் புதிதாக அவர்களை சந்தித்து பேச வேண்டும், இழந்த வியாபாரத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
சமையல் கியாஸ் இணைப்பு 6 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள். அரசு அறிவித்தால் தான் புதிய சமையல் கியாஸ் இணைப்பு வழங்க முடியும் என்றார்.