விஷம் கலந்த தண்ணீரை குடித்து 3 மாடுகள் உயிரிழப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கால்நடைகளுக்கு பின்னியம்மாள் தொட்டியில் தண்ணீர் வைத்து விட்டு சென்று விட்டார். சோதனையில் கால்நடைகள் யூரியா கலந்த தண்ணீர் குடித்து இறந்தது தெரிய வந்தது.
இறந்து கிடந்த மாடுகள்
இறந்து கிடந்த மாடுகள்
Published on

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் அருகே உள்ள உசிலம்பட்டி நல்லுதேவன்பட்டியை சேர்ந்த பாண்டி. இவரது மனைவி பின்னியம்மாள். இவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகே மாட்டு கொட்டகை ஒன்றை அமைத்து அங்கு பசு மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வந்தனர்.

இவைகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மாடுகள், ஆடுகள் கொட்டகையில் கட்டப்பட்டன.

இதை தொடர்ந்து கால்நடைகளுக்கு பின்னியம்மாள் தொட்டியில் தண்ணீர் வைத்து விட்டு சென்று விட்டார். இதற்கிடையில் நள்ளிரவில் மாடுகள், ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. உடனே பின்னியம்மாள் கொட்டகைக்கு சென்று பார்த்தார். அங்கு 3 மாடுகள், 1 ஆடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பின்னியம்மாள் கதறி அழுதார்.

பின்னர் இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் இறந்து கிடந்த 3 பசு மாடுகள், ஆடுகளை சோதனை செய்தனர். இந்த சோதனையில் கால்நடைகள் யூரியா கலந்த தண்ணீர் குடித்து இறந்தது தெரிய வந்தது.

முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் தண்ணீரில் விஷம் கலந்தார்களா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com