

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு செல்லும் சாலையில் குண்டலப்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட எல்லுகுட்டை ஏரியில் மீன் வளர்ப்பு குத்தகையை, அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவர் எடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை ரங்கசாமி வழக்கம் போல், ஏரிக்கு சென்றார். அங்கு அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன. இதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உடனடியாக ஏரியில் செத்து கிடந்த மீன்களை அகற்றினர்.
இதுகுறித்து குத்தகைதாரர் ரங்கசாமி கூறுகையில், "கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், நீர்மட்டம் சரிந்து உள்ளது. இதனால் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து சுமார் 20 டன் மீன்கள் செத்தன. இதுகுறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.