

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்டெண்டர் எனப்படும் பாதுகாவலர் இல்லாமல் தங்கி சிகிச்சை பெறும் நோயாளி முதியவர்களை நள்ளிரவு 12 மணியளவில் யாருக்கும் தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனையை விட்டு வெளியேற்றி சாலையோரத்தில் விட்டு செல்லும் கொடூரம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியாளர்களின் மனிதாபிமானமற்ற தன்மையையும் காட்டுவதாக உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அட்டெண்டர்கள் இல்லாத, அதாவது நோயாளியுடன் உடன் இருப்பவர்கள் இல்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ள ஆதரவற்ற நோயாளிகளை அப்புறப்படுத்தும் செயல் பதிவாகியுள்ளது.
அதிலும் வயது முதிர்ந்த நோயாளிகளை நள்ளிரவு நேரத்தில் அனைவரும் தூங்கிய பிறகு மருத்துவமனை பணியாளர்கள் தள்ளுவண்டியில் வைத்து அவர்களை எடுத்து வந்து மருத்துவமனைக்கு வெளியே சாலையோரத்தில் விட்டு விட்டு செல்கின்றனர். இதுகுறித்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதத்தில் நேற்று நள்ளிரவு இரண்டு ஆதரவற்ற கேட்பதற்கு ஆள் இல்லாத வயது முதிர்ந்த நோயாளிகளை இரவோடு இரவாக மருத்துவமனை வார்டில் இருந்து தள்ளு வண்டி மூலம் எடுத்து வந்து மருத்துவமனைக்கு வெளியே சாலையோரத்தில் விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதனை அந்த பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்கள் சிகிச்சை பெறுவதற்காக தான் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காகத்தான் அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது.
இந்த நிலையில் கேட்பதற்கு ஆளில்லை என்பதால் ஆதரவற்ற வயது முதிர்ந்த நோயாளிகளை இரவோடு இரவாக மருத்துவமனை வார்டை விட்டு வெளியேற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற செயல் புதிய அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்தநிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையாக முதியவர்களை வெளியேற்றிய 2 ஊழியர்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் உடனடியாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள் மீண்டும் அங்கு அனுமதிக்கப்பட்டனர்.