அறந்தாங்கி அருகே மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 137 பவுன் நகைகள் கொள்ளை

பீரோ வைக்கப்பட்டிருந்த அறை அலங்கோலமாமக காட்சி அளித்தது.
அறந்தாங்கி அருகே மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 137 பவுன் நகைகள் கொள்ளை
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் முக்கிய பகுதியாக திகழ்வது அப்துல்ஹமீது தெரு. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஹாஜா நாஜிமுதீன் மற்றும் கிரீன்முகமது. இதில் ஹாஜா நஜிமுதீன் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புர்கா உள்ளிட்டோர் குடும்பத்துடன் அறந்தாங்கி வீட்டில் வசித்து வருகிறார்கள். அதேபோல் கிரீன்முக மதுவும் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 27-ம் நாள் லைலத்துள் கத்ரு எனப்படும் புனித இரவு சிறப்பு தொழுகை அனைத்து பள்ளி வாசல்களிலும் நடைபெற்றது. மற்ற நாட்களில் மாலை 6.30 இரவு ரம்ஜான் சிறப்பு தொழுகை முடிவடையும் நிலையில் நேற்று நள்ளிரவு வரை இந்த சிறப்பு தொழுகை நடந்தது.

அதேபோல் அறந்தாங்கி பள்ளி வாசலில் நடைபெற்ற தொழுகையில் ஹாஜா நஜிமுதீன் மற்றும் கிரீன் முகமது குடும்பத்தினர் அனைவரும் சென்றிருந்தனர். இன்று அதிகாலையில் அவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு வீடுகளுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்புற பிரதான கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. பீரோ வைக்கப்பட்டிருந்த அறை அலங்கோலமாமக காட்சி அளித்தது. இதில் ஹாஜா நஜிமுதீன் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 137 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.

அந்த நகைகளை ஹாஜா நஜிமுதீன் குடும்பத்தினர் தங்கள் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்தனர். சிறப்பு தொழுகை நடத்துவதற்காக அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் சென்றிருப்பதை தொடர்ந்து நோட்டமிட்டு தெரிந்து வைத்திருந்த மர்மநபர்கள் துணிச்சலுடன் வீடு புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

அதேபோல் அருகில் வசிக்கும் கிரீன் முகமது வீட்டின் பூட்டையும் உடைத்துள்ள கொள்ளையர்கள் அங்கும் ரூ.2 லட்சம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். மகளின் திருமணத்திற்காக வெளிநாட்டில் வேலை பார்த்து கணவர் அனுப்பிய பணத்தில் வாங்கி வைத்திருந்த நகைகள் கொள்ளை போனதால் ஹாஜா நஜிமுதீன் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொள்ளை சம்பவம் குறித்து இரு வீட்டாரின் குடும்பத்தினரும் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு கொள்ளையர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர். குறிப்பாக வீட்டில் நகைகள் இருக்கும் இடத்தை நன்கு தெரிந்த நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் சம்பவம் நடந்த போது திருடு போன வீட்டில் முன்புறம் இரண்டு திருடர்கள் நடந்து சென்று நோட்டமிடும் காட்சிகளும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகளையும் கைப்பற்றியுள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com