

தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோர்களின் வயது 50-க்குள்ளாகவே உள்ளது. கே.ஏ. செங்கோட்டையன் மட்டுமே 75 வயதை கடந்தவராக உள்ளார். இதனால் விஜய் தலைமையிலான அமைச்சரவை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிராத இளம் அமைச்சரவையாக கருதப்படுகிறது.
கே.ஏ. செங்கோட்டையனுக்கு 78 வயதாகிறது. இவரே ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வயது மூத்தவராக உள்ளார். அவரை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த்துக்கு 62 வயது ஆகிறது. காங்கிரஸ் சார்பில் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விஸ்வநாதனின் வயது 61 ஆகும். வேளச்சேரி எம்.எல்.ஏ., குமாருக்கு 60 வயதாகிறது. இந்த 4 பேர் மட்டுமே த.வெ.க.வின் அமைச்சரவையில் 60 வயதை கடந்தவர்களாக உள்ளனர்.
முதலமைச்சர் விஜய்க்கு 51 வயதாகிறது. கிள்ளியூர் தொகுதியில் இருந்து அமைச்சரான ராஜேஷ்குமாருக்கு 51 வயது ஆகிறது.
தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரான ஸ்ரீநாத், அரக்கோணம் காந்திராஜ் 52 வயதை எட்டியுள்ளனர்.
குமாரபாளையம் விஜயலட்சுமி, காஞ்சிபுரம் ரஞ்சித்குமார், சேலம் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோருக்கு 50 வயதாகிறது.
அருண் ராஜிற்கு 46 வயது, ஆதவ் அர்ஜுனாவிற்கு 42 வயது, ஆர். நிர்மல்குமாருக்கு 44 வயது ஆகிறது.
அவிநாசி தொகுதியில் வென்ற கமலி 28 வயதில் அமைச்சராகி மாநிலத்தின் இளம் அமைச்சராக உள்ளார். சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வென்ற கீர்த்தனாவிற்கு 29 வயது.
31 வயது ஆன ரமேஷ், பர்வேஸ், 32 வயது ஆன வினோத், 34 வயது ஆன சரத், ராஜீவ், 36 வயது ஆன தென்னரசு, 38 வயது ஆன விக்னேஷ், 39 வயது ஆன ராஜ்மோகன், விஜய் பாலாஜி ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர்.
இந்த இளம் அமைச்சரவையானது 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைத்த போதும், 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைத்த போதும் காணப்பட்டதை போன்று பல புதிய முகங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றன. 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக 2 பேரும், 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக 9 பேரும், 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாக 11 பேரும், 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாக 7 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.