

அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் வருகிற மே மாதம் 4- ந்தேதி தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே தற்போது அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெயில் அடித்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் சேலம் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மதிய வேளைகளில் அனல் காற்று வீசுவதால் ஏற்படும் புழுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக சேலம் நகரின் முக்கிய சாலைகளான ஓமலூர் மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு, சாரதா கல்லூரி ரோடு, 4 ரோடு, 5 ரோடு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து குறைந்த அளவிலே தான் இருந்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
வேலை விஷயமாக வெளியே சென்று வீடு திரும்பும் பொதுமக்கள், முதியோர், பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மோர், கம்மங்கூழ், தர்பூசணி, இளநீர், லெமன் ஜூஸ், முலாம்பழ ஜூஸ், வெள்ளரிப்பழ ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜூஸ் வகைகளை வாங்கி அருந்தி மக்கள் தங்களின் தாகம் தீர்த்து வருகின்றனர். இதனால் பழக்கடை, ஜூஸ் கடைகளில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 102.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. நேற்று 101.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.