இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 60 இந்திய மீனவர்கள் மற்றும் 146 மீன்பிடி படகுகளை விடுவிக்கும் வகையில், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
Published on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த தமிழக  மீனவர்கள் சிலர் பாக். ஜலசந்தியில்  நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்தில் சிறை வைத்துள்ளனர். அத்துடன் அவர்கள் வைத்திருந்த இரண்டு மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

தமிழக  மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கு பாக் ஜலசந்தியையே நம்பியுள்ளனர். ஆனால், இலங்கை கடற்படையினர் அவர்களை
நிம்மதியாக மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை. அவர்கள் மீனவர்களை துன்புறுத்தி வருவதால், மீனவர்கள் கடும் வேதனையடைந்து வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க வகைசெய்யவும், 1974ல் இந்தியா-இலங்கை செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இலங்கை கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் வாடும் 60 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ள 146 மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு மத்திய அரசு உரிய அழுத்தம் தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com