தமிழகத்தில் வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பும்- தமிழிசை பேட்டி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பா.ஜனதா விரைவில் நிரப்பும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #tamilisai #bjp #rajinikanth
தமிழகத்தில் வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பும்- தமிழிசை பேட்டி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட பா.ஜனதா சார்பில் மகாசக்தி, சக்தி கேந்திரா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தமிழ் தாமரை யாத்திரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறோம். 12 மாவட்டங்களில் இந்த பயணம் நிறைவடைந்துள்ளது. மாவட்டம் தோறும் பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைத்து அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காக களப்பணியாற்ற உத்தரவிட்டுள்ளோம். தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

உலக மகளிர் தினம் கொண்டாடி வரும் நாளில் திருச்சியில் உஷா என்ற கர்ப்பிணி போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆய்வாளர் காமராஜை காப்பாற்றும் முயற்சியில் தான் போலீஸ் அதிகாரிகளும், தமிழக அரசும் ஈடுபட்டு வருகிறது.

திருச்செந்தூரில் நெல்லையம்மாள் என்ற பா.ஜ.க. தொண்டர் தாக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சரி இல்லை.

ரஜினிகாந்த் கூறியதைப்போல தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான். அதனை பா.ஜனதா விரைவில் நிரப்பும். இந்தியாவில் 22 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி சிறப்புடன் நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக தமிழகத்திலும் எங்கள் ஆட்சி மலரும்.

சமீப காலமாக மாணவர்களிடையே வன்முறை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் தற்போது கத்தியுடன் திரிகிறார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டும். பள்ளிகளில் பண்பாட்டு வகுப்பு நடத்தப்பட வேண்டும். மாணவிகளுக்கு கவுன்சிலிங் வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மன நிலை மையங்கள் அமைக்க வேண்டும்.

டி.டி.வி. தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் கிடைத்ததால் அரசியலில் பெரிய மாற்றம் நிகழப் போவது இல்லை. ஏனெனில் குக்கர் என்றாலே ஊழல்தான் என்று மக்கள் நினைத்து விட்டனர். 20 ரூபாய் நோட்டை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆர்.கே. நகர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். அந்த சின்னத்தை மீண்டும் பெற்று விட்டதால் மறுபடியும் ஊழல் செய்துதான் வெற்றிபெற முடியும் என்று அவர்கள் நினைக்க கூடும். ஆனால் அரசியலில் நேர்மறையான தாக்கத்தை இது ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #tamilisai #bjp #rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com