

பணகுடி:
ராதாபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அப்பாவுக்கு இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுஉலைக்கு நிலம் கொடுத்து வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள், பல்வேறு விளையாட்டு அமைப்பை சார்ந்த சுமார் 150-க்கும் அதிகமான இளைஞர்கள், ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் தினேஷ்குமார், ஜெகதீஸ் ஜெகா, சதீஸ்குமார் தலைமையில் ராதாபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை சந்தித்தனர்.
அவர்கள் தி.மு.க வேட்பாளர் அப்பாவுக்கு ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்தும் கூடங்குளம் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் மத்தியில் வேட்பாளர் அப்பாவு பேசியதாவது:-
கூடங்குளம் அணுஉலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் 2006 முதல் 2011 வரைக்கும் பணிவாய்ப்பு பெற்று கொடுத்தோம். அதன் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டதோடு, அணு உலையில் இப்பகுதி இளைஞர்களுக்கு தற்காலிக பணிவாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. கூடங்குளம் அணுஉலை அறவழி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு உள்பட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் கூடங்குளம் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், உடற்பயிற்சி கூடமும் பெற்று தருவேன்.
கூட்டு குடிநீர் திட்டம் மறுசீரமைப்பு செய்து அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும். கூடங்குளம் பகுதி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தருவேன். அனைவரும் களப்பணி செய்து ஆதரவு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூடங்குளம் நேசராஜ், கலையரசன், லிங்கம், பொன்பாண்டி, ஜெயகணேஷ், ரமேஷ், செல்வன், ஜெயபிரகாஷ், ராஜதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காவல்கிணறு இயேசுவின் திருஇருதய ஆலய பங்குதந்தை ஆரோக்கியராஜ் அடிகள், உதவி பங்குதந்தை அன்பு ஜெபமாலை ஆகியோரிடம் வேட்பாளர் அப்பாவு ஆசி பெற்றார். பங்கு மேய்ப்பு பணி குழுவினர் எம்.ஏ.ராஜ், சேவியர், இசிதோர் சில்வா, தெற்கு வள்ளியூர் ஒன்றிய தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோசிஜின், கிளை செயலாளர்கள் அனிஸ்டன், எழில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.