

திருச்செந்தூர்:
தமிழக பா.ஜனதா சார்பில் வேல் யாத்திரை நிறைவு விழா திருச்செந்தூரில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 200 பேருக்கு மட்டுமே போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்திருந்தனர்.
ஆனால் போலீசார் எச்சரித்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த வேல் யாத்திரையில் கலந்து கொண்டனர். இதனால் விதிமுறையை மீறி யாத்திரை நிறைவு விழாவில் பலர் கலந்து கொண்டதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நோய்களை பரப்பும் விதமாகவும், பொது ஊழியர்களின் அதாவது போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் உத்தரவை மீறும் விதமாகவும், சட்டவிரோதமாக பொதுக் கூட்டத்தில் கூடியதாகவும் கூறி பா.ஜனதாவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் பால்ராஜ் உள்பட சுமார் ஆயிரம் பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 188, 269 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.