

தோகைமலை:
தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து, புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வேளாண்மை அறிவியல் மையம் முதுநிலை விஞ்ஞானி திரவியம் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய தண்ணீர் தேங்காத நிலங்கள் உகந்ததாகும். இதில் கோ 1, 2, 3, 4, 5 மற்றும் எம். டி1 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு உகந்ததாகும். ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாகுபடி தொடங்கலாம்.
மண்ணில் காரத்தன்மை 6 முதல் 7-க்குள் இருக்க வேண்டும். தண்ணீர் நன்கு தேங்காதவாறு செம்மண் நிலமாக இருந்தால் சாகுபடி சிறப்பாக இருக்கும்.
ஏக்கர் ஒன்றுக்கு 1,500 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். விதை வெங்காயம் 10 சென்டி மீட்டர் இடைவெளியில் இருபுறமும் நட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதனை தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் கழித்து தண்ணீர் பாய்ச்சிய பிறகு 5, 7 நாட்களுக்கு இடைவேளை நீர்ப்பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு 15 டன் முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.