ரஜினி நிச்சயம் அரசியல் களத்தை மாற்றுவார்: 14 சதவீதம் வாக்குகளை பிரிப்பார் - குருமூர்த்தி கணிப்பு

ரஜினிகாந்த் அரசியல் களத்தை நிச்சயம் மாற்றுவார் என்றும் அவர் 14 சதவீதம் வாக்குகளை பிரிப்பார் என்றும் குருமூர்த்தி கணித்துள்ளார்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

ரஜினியின் நண்பரும், துக்ளக் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி ரஜினி தனிக்கட்சி தொடங்குவதால் ஏற்படப்போகும் மாற்றங்கள் பற்றி பல்வேறு பத்திரிக்கைகளில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் ரஜினி வருகையால் தமிழக அரசியலில் அடித்தள மாற்றம் ஏற்படும் என்றும், எம்.ஜி.ஆர். போல ரஜினியும் அரசியலில் சாதிப்பார் என்றும் கூறி உள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

ரஜினி வருகையால் தமிழ்நாட்டின் அரசியல் மாறப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை. 1973-ம் ஆண்டு திண்டுக்கல் மக்கள் எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தனர். தி.மு.க.வை தோற்கடிக்க எம்.ஜி.ஆரால் மட்டுமே முடியும் என்பதை மக்கள் நம்பினார்கள்.

அதேநம்பிக்கை இன்று ரஜினி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ரஜினி, எம்.ஜி.ஆர். போன்று நல்லவர். ஆன்மிகவாதி, தவறு செய்யமாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். ரஜினி போன்று வெளிப்படையான அரசியல்வாதி இப்போது யாரும் இல்லை. எனவே நிச்சயமாக ரஜினிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்.

தமிழக மக்கள் தி.மு.க.வை விரும்பவில்லை. அதனால்தான் அ.தி.மு.க. ஜெயித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது ரஜினி வந்திருப்பதால் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் விரும்பாதவர்கள் ரஜினிக்குத் தான் வாக்களிப்பார்கள்.

ரஜினி வருகையால் எல்லா கட்சிகளுக்கும் பாதிப்பு உண்டு. தி.மு.க.வுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். பா.ஜனதா கட்சி ரஜினியுடன் சேர்ந்தால் அந்த கட்சிக்கு ஆதாயம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இழப்புத்தான் ஏற்படும். ஏனெனில் பா.ஜனதா கொள்கைகள் தான் ரஜினி கொள்கைகளாக உள்ளது. பா.ஜனதா தேசிய அளவில் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் ரஜினி ஆதரித்து வருகிறார். எனவே ரஜினியால் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்குமா என்று தெரியவில்லை. அது அரசியல் சூழ்நிலை பொறுத்துதான் மாறும்.

ரஜினி அரசியல் கட்சியை தொடங்கியதும் சிறப்பான கொள்கைகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறேன். அந்த கொள்கைகள் நிச்சயம் அவருக்கு வெற்றியை தேடி தரும்.

ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலில் நுழைவது பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறார். அதன்மூலம் அவருக்கு 14 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எதிராக இருக்கும் வாக்குகளை அவர் பிரித்து விட்டாலே போதும் ரஜினி தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார். இதில் சந்தேகமே வேண்டாம்.

இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com