

சென்னை:
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்தார். இதற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான வழக்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ள தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் காலதாமதமான நடவடிக்கை என்றாலும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அதை வரவேற்கிறது. அதே நேரத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தநிலையில் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உள்ளான பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டாலும், பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் வருகிற 20-ந் தேதி சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான தொடர் முழக்கப் போராட்டத்தையும் நடத்த உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று முதல் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளது.
எனவே தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மேலும், வேலை நிறுத்தக் காலத்தில் பணி மாறுதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு முன்பு அவர்கள் பணியாற்றிய இடத்தில் பணி அமர்த்த வேண்டும். கடந்த காலங்களை போல் வேலை நிறுத்தக் காலத்தை முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூ ட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.