கொரோனா பாதித்து மறைந்த மாநிலங்களவை எம்.பி. மோஹபத்ராவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த பாராளுமன்ற மேலவை எம்.பி. மற்றும் பிரபல சிற்பியான மோஹபத்ரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

ஒடிசா மாநிலம் புரியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர், சிற்பி ரகுநாத் மோஹபத்ரா. கடந்த 1943-ம் ஆண்டு பிறந்த இவர், 1975-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும், 2001-ல் பத்ம பூஷன் விருதையும், 2013-ல் பத்ம விபூஷன் விருதையும் வென்றவர்.

ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மோஹபத்ரா ஜி மறைவு செய்தி அறிந்து வேதனையுற்றேன். கலை, கட்டிடக் கலை மற்றும் கலாசார உலகில் அளப்பரிய பங்காற்றியவர். பாரம்பரிய கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் பங்காற்றியதில் அவர் நினைவுகூரப்படுவார்.

அவரது குடும்பம் மற்றும் நலம் விரும்பிகளின் எண்ணத்துடன் இணைந்துள்ளேன். ஓம் சாந்தி என தெரிவித்து உள்ளார். இதேபோல், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்னாயக்கும் மோஹபத்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com