

சென்னை:
தன்னலமற்று மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் டாக்டர்கள் அனைவருக்கும் ‘இந்திய டாக்டர்கள் நாளில்' வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் புகழ்பெற்ற டாக்டரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் நாள் ‘இந்திய டாக்டர்கள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 80 ஆண்டுகள் வாழ்ந்த டாக்டர். பி.சி.ராய் பிறந்ததும், இறந்ததும் ஜூலை முதல் நாள்தான்.
குறிப்பாக, கொரோனா 2-வது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த நேரத்தில் தி.மு.க. அரசு அமைந்தது. அப்போது நாம் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளில், தளகர்த்தர்களாக - சிப்பாய்களாக - முன்கள வீரர்களாக பணியாற்றி, நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த டாக்டர்களுக்கு இந்த நன்னாளில் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படியுங்கள்...நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மகால் கட்டினாலும் இடிக்கப்படும்- ஐகோர்ட்டு எச்சரிக்கை
இது மக்களின் அரசு. மக்களின் உயிர்காக்கும் டாக்டர்களுக்கான அரசாகவும் என்றும் இருக்கும் என்ற உறுதியினை வழங்குகிறேன். அதன் அடையாளமாகத்தான் கொரோனா தடுப்பு பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.25 லட்சமும், பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.
நீங்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள். இந்த அரசு உங்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும்; துணை நிற்கும்.