திருப்பதிக்கு இணையாக தரம் உயர்த்த திருச்செந்தூர் கோவில் சீரமைப்புக்கு மாஸ்டர் பிளான் - அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் கோவிலுக்கு நாடுமுழுவதும் இருந்து பக்தர்களும், யாத்ரீகர்களும் ஆண்டு முழுவதும் வருகிறார்கள். எனவே குடிநீர், கழிவறை, தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் விரைவாக செய்து முடிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவில்
திருச்செந்தூர் முருகன் கோவில்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், கனிமொழி எம்.பி., அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

விரைவில் குடமுழுக்கு நடத்துவது உள்ளிட்ட கோவில் சீரமைப்பு பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

திருச்செந்தூர் கோவிலுக்கு நாடுமுழுவதும் இருந்து பக்தர்களும், யாத்ரீகர்களும் ஆண்டு முழுவதும் வருகிறார்கள். எனவே குடிநீர், கழிவறை, தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் விரைவாக செய்து முடிக்கப்படும்.

பக்தர்கள் தங்கும் வசதிக்காக யாத்திரி நிவாஸ் கட்டப்படுகிறது. அதன் முகப்பு வடிவம் சாதாரணமாக இருக்கிறது. அதை பிரமாண்டமாக வடிவமைக்க கூறி இருக்கிறேன்.

திருச்செந்தூர் புகழை நாடுமுழுவதும் கொன்டு சேர்க்க திருப்பதிக்கு இணையாக மேம்படுத்துவதற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறேன். கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதனை அகற்றவும், ஒழுங்கு முறைப்படுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது பற்றியும் திட்டமிடப்பட உள்ளது.

கர்ப்ப கிரகத்தை எப்போதும் சுத்தமாக பராமரிக்கவும், பக்தர்கள் அதிகநேரம் காத்து இருக்காமல் விரைவாக தரிசனம் செய்யவும் தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ராணி மகாராஜபுரம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 75 ஏக்கர் நிலமும், நைனார்பத்து பகுதியில் 25 ஏக்கர் நிலமும் இருப்பதை நேரில் பார்வையிட்டேன். அந்த இடங்களில் மக்கள் பயன்பாட்டுக்கான திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்படும்

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவில் திருப்பணிகள் விரைவாக செய்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com