குழந்தை இறந்து பிறந்த நிலையில் நர்சும் உயிரிழப்பு

அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க நினைத்த நர்சுக்கு குழந்தை இறந்து பிறந்த நிலையில், அவரும் பரிதாபமாக இறந்தார்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த பூலாம்பாடியை சேர்ந்தவர் விஜயவர்மன் (வயது 35). இவர் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்து வருகிறார். இவரது மனைவி அழகம்மாள்(29). பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அழகம்மாள் கர்ப்பமடைந்தார். இதையடுத்து அவரை மாதாந்திர பரிசோதனைக்காக பூலாம்பாடி கிராம சுகாதார செவிலியர்கள் அழைத்தபோது, எங்களுக்கு ஆங்கில மருத்துவம் வேண்டாம். இயற்கையாக அக்குபஞ்சர் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை நாங்களே தேடிக்கொள்கிறோம், என்று அவர் கூறியதாக தெரிகிறது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அழகம்மாளுக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. மேலும் அழகம்மாளின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com