தடுப்பூசி மாற்றி செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

உத்தரபிரதேசத்தில் கிராமத்தினருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும் இரண்டாவது டோஸ் கோவாக்சினும் என மாற்றி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி மாற்றி செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும்
தடுப்பூசி மாற்றி செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும்
Published on

லக்னோ:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளது.

இதற்கிடையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும், இரண்டாவது டோஸ் கோவாக்சினும் என மாற்றி செலுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அம்மாநிலத்தில் உள்ள சித்தார்த்நகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. அப்போது, சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து அந்த கிராமத்தினருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கடந்த 14-ம் தேதி செலுத்தப்பட்டது. ஆனால், முதல் டோஸ் கோவிஷீல்டு செலுத்தப்பட்ட நிலையில் இரண்டாவது டோஸ் கோவிஷீல்டுக்கு பதிலாக தவறுதலாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திக்கொண்ட கிராமத்தினர் 20 பேருக்கு கோவாக்சின் இரண்டாவது டோஸாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடுப்பூசி மாற்றி செலுத்தப்பட்ட 20 பேரில் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உத்தரபிரதேசத்தில் கிராமத்தினர் 20 பேருக்கு கொரோனா தடுப்பூசி மாற்றி செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் கூறுகையில், இரண்டு டோஸ்களும் ஒரே தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று எங்கள் நெறிமுறையில் தெளிவாக உள்ளது. தடுப்பூசி மாற்றி செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும். இது உண்மையாக நடந்திருந்தாலும் அது கவலைக்குரிய விஷயம் அல்ல’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com