

குழித்துறை:
குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த ரூபன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கோடிமுனை பகுதியை சேர்ந்த ஜூலியஸ் நாயகம் (வயது 51) என்பவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மரியநாடு பகுதியை சேர்ந்த ஷாஜன் (28) ஆகிய இருவரும் சேர்ந்து மாதத்திற்கு ரூ.75 ஆயிரம் வாடகை என ஒப்பந்த அடிப்படையில் எடுத்து லட்சத்தீவு பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
கடந்த 2-ந் தேதி ஜூலியஸ் மற்றும் ஷாஜன் ஆகியோர் வடமாநிலத்தை சேர்ந்த 2 பேருடன் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சதீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். அங்கு கடந்த 10 நாட்களக தங்கி இருந்து மீன்பிடித்து வந்தனர்.
இந்த நிலையில் திடீரென இந்த மீனவர்களின் விசைப்படகை லட்சத்தீவு கடற்படையினர் சிறைப்பிடித்து படகில் இருந்த குமரி மீனவர் ஜூலியஸ் உட்பட 4 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் தடைசெய்யபட்டுள்ள குக்கும்பர் வகை மீன்களை பிடித்ததால் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மீனவரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். லட்சத்தீவு பகுதியில் சிறை பிடிக்கபட்டு வைத்திருக்கும் மீனவர்களையும் அவர்களது படகையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.