

அடுக்கம்பாறை:
வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் உடல்களும் நேற்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் மாணவிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து கலெக்டர் ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை மற்றும் வருவாய்த்துறை, கல்வித்துறை மூலமாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த மாணவிகள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, வகுப்பு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் பெற்றோர் கூலி வேலை செய்வதால் அவர்களின் குடும்பத்தில் தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்படும். இதுதொடர்பாக தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
பள்ளி மாணவ-மாணவிகளிடையே மனஉறுதி குறித்து ஆலோசனை வழங்க மாவட்ட ஆலோசனை மையம் அமைக்கவும், ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி அதில் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம், பாடம் நடத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறுகையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ள தலைமை ஆசிரியை ரமாமணி, வகுப்பு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
முன்னதாக நேற்று காலை மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் நடந்தபோது, அரக்கோணம் போலீசார் மருத்துவமனையில் காத்திருந்த மாணவிகளின் பெற்றோர்களை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தலைமை ஆசிரியை ரமாமணி விளக்கம் அளித்தார்.
பின்பு 11 மணி அளவில் பிரேத பரிசோதனை தொடங்கியபோது போலீசார் மாணவிகளின் பெற்றோரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரை முற்றுகையிட்டு, ‘எங்களுக்கு தெரியாமலேயே உடல்களை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்துள்ளர்கள். அதனால் உடல்களை வாங்க மாட்டோம்’ எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் மாவட்ட கலெக்டர் ராமன் மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன்பின்பு மாணவிகளின் உடல்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.