கூடங்குளம் அருகே காட்டுப்பகுதியில் கிடந்த வெடிக்காத நாட்டு வெடிகுண்டால் பரபரப்பு- போலீசார் விசாரணை

நெல்லை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அருகே காட்டுப்பகுதியில் கிடந்த வெடிக்காத நாட்டு வெடிகுண்டால் பரபரப்பு- போலீசார் விசாரணை
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை பகுதியில் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு இடிந்தகரை ஊருக்கு சற்று தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் சிலர் சென்றபோது அங்கு மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார், கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் நடத்திய ஆய்வில் அது நாட்டு வெடிகுண்டு என்பதும், வெடிக்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேற செய்தனர். பின்னர் நெல்லை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை இடிந்தகரைக்கு விரைந்து சென்று வெடிக்காமல் இருந்த நாட்டு வெடிகுண்டை பத்திரமாக கைப்பற்றினர்.

தொடர்ந்து அதனை செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் யாரேனும் நாட்டு வெடிகுண்டை வீசி பயிற்சி எடுத்திருக்கலாம், அப்போது அது வெடிக்காமல் இருந்திருக்கும்.

இதனால் அதை மீண்டும் எடுத்துச்செல்லாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

எனினும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு இன்று காலை அந்த காட்டுப்பகுதி முழுவதும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com