ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

நீர்வரத்து காரணமாக ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 14-வது நாளாக நீடித்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதை படத்தில் காணலாம்.
Published on

ஒகேனக்கல்:

கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் அதனுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழையைப் பொறுத்து இரு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.

கர்நாடகா இரு அணைகளில் இருந்தும் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 78,443 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 80 ஆயிரத்து 326 கன அடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த நீர்வரத்து காரணமாக ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் மாற்றுப் பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 14-வது நாளாக நீடித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com