search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விழுப்புரம் அருகே பெண் தர மறுத்த பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்
    X

    விழுப்புரம் அருகே பெண் தர மறுத்த பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்

    • கோவிந்தனுடன் சேர்ந்து பாரதி விவசாய பணிகளை கவனித்து வந்தார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கியடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது.
    • கோவிந்தன் பால் கறந்து கொண்டிருந்த போது அங்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, விவசாயி கோவிந்தனின் தலையில் சுட்டார்.

    விழுப்புரம்:

    பெண் தர மறுத்ததால் பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தை அடுத்துள்ள கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(40). விவசாயி.

    இவரது மனைவி கலையம்மாள் (32). இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன்பாரதி(23) சிறு வயதிலே தாயை இழந்தவர். தந்தையும் அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் பாரதியை கோவிந்தன் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்தார். கோவிந்தனின் விவசாய நிலம் ஊருக்கு எல்லை பகுதியில் காப்பு காடு அருகில் உள்ளது. அங்கு அவர் வீடு கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

    கோவிந்தனுடன் சேர்ந்து பாரதி விவசாய பணிகளை கவனித்து வந்தார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கியடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோவிந்தனின் மூத்த மகளை பாரதி ஒரு தலையைாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கோவிந்தனிடம் பாரதி கேட்டதாக தெரிகிறது.

    இதில் அந்த பெண்ணிற்கும் விருப்பம் இல்லாததால் கோவிந்தன், பெண் தர மறுத்துள்ளார்.இதனால் கோவிந்தன் மீது பாரதி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கோவிந்தன் பால் கறந்து கொண்டிருந்த போது அங்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, விவசாயி கோவிந்தனின் தலையில் சுட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த கோவிந்தன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அவரது மனைவி கலையம்மாளையும் பாரதி நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் காலில் பலத்த காயத்துடன் அவர் அலறினார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் பாரதி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன் பின்னர் படுகாயம் அடைந்த கணவன்-மனைவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற கோவிந்தன் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். கலையம்மாள் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் விழுப்புரம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    தப்பி ஓடிய பாரதி அப்பகுதியில் உள்ள காப்பு காட்டில் பதுங்கி உள்ளார்.அவரை விழுப்புரம் வன சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தம்பதியை வளர்ப்பு மகனே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×