search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிராம நிர்வாக அலுவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்ற 2 பேர் கைது
    X

    கிராம நிர்வாக அலுவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்ற 2 பேர் கைது

    • தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் குமார் (37). இவர் தனது உயர் அலுவலர்களின் உத்தரவின் பேரில் கடந்த சனிக்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது சமுத்திரம் கிராமம் அருகே உள்ள காளியம்மன் கோவில் மூலக்கடை பகுதியில் சிலர் கனரக எந்திரத்தினை கொண்டு மண்ணை அள்ளி டிராக்டர் மூலம் கடத்துவதை கண்டு அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் அங்கு சட்ட விரோதமான முறையில் உரிய அனுமதி இன்றி மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அப்போது மண் கடத்தலில் ஈடுபட்டிருந்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், மணிகண்டன் மற்றும் இவர்களின் நண்பரான சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோருக்கும் கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் திடீரென அவர்கள் 3 பேரும் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் குமாரை தாக்கியுள்ளனர்.


    மேலும் அங்கிருந்த டிராக்டரை வேகமாக ஓட்டி வந்து குமார் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் குமார் கூச்சல் போடவே அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர். இதை கண்டு சம்பந்தப்பட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை புதுப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த காளியம்மன் கோவில் மூலக்கடை பகுதியை சேர்ந்த அழகேசன் மகன் ஈஸ்வரன் (31), முத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் மணிகண்டன் (33) ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தலைமறைவாக உள்ள சமுத்திரம் பகுதியை சேர்ந்த செந்திலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் குமார் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மண் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×