நடுக்கடலில் மீனவர்களிடம் கத்திமுனையில் பொருட்களை பறித்த இலங்கை கடல் கொள்ளையர்கள்

தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
நடுக்கடலில் மீனவர்களிடம் கத்திமுனையில் பொருட்களை பறித்த இலங்கை கடல் கொள்ளையர்கள்
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மதியழகன், குமரவேல், நெடுஞ்செழியன் ஆகிய 4 பேரும் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 10 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பைபர் படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கத்தி முனையில் மீனவர்களை மிரட்டி படகில் இருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன்கள் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்நிலையில் இன்று காலை ஆறுகாட்டுதுறைக்கு கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com