search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிக தண்ணீர்: சிவ்தாஸ் மீனா தகவல்
    X

    மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிக தண்ணீர்: சிவ்தாஸ் மீனா தகவல்

    • வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அதிகனமழை பெய்தது.

    வரலாறு காணாத வகையில் பெய்த இந்த மழையால், வழக்கமாக மழை வெள்ளத்தால் பாதிக்காத வறட்சியான பகுதியில் கூட வெள்ளம் சூழ்ந்தது.

    கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் அந்த தண்ணீர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி என பல்வேறு இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    வெள்ளம் படிப்படியாக குறைந்ததையடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இதனால் விமானம், ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட திருச்செந்தூர் உள்ளிட்ட சில இடங்களுக்கும் தற்போது போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

    புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி இருந்தாலும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இன்று 7-வது நாளாகவும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை வெளியேற்றும் பணி இரவு, பகலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ளம் பாதித்த மறவன்மடம், குறிஞ்சி நகர், 3-ம் கேட் பகுதி, அந்தோணியார்புரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

    தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

    குறிஞ்சி நகரில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பக்கிள் ஓடை மூலமாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேங்கிய வெள்ள நீர் பம்பிங் செய்யப்பட்டும் வெளியேற்றப்படுகிறது. அதற்கு தேவையான கூடுதல் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.


    குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைந்துள்ள சாலையில் தேங்கிய வெள்ளத்தில் நடந்து சென்று ஆய்வு செய்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.


    ரெயில்வே கேட் பகுதிக்குள் கூடுதல் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம், மின்சாரம் தாக்கி, வீடு இடிந்து என 22 பேர் பலியாகி உள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 40 முதல் 55 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. அதன் மூலம் 150 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இது மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாறுகால்கள் முறையாக தூர்வாரப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ரூ.200 கோடியில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிர்கள் கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மழை வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் தவித்து வருவதாகவும், உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×