search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் திடீர் மழை- வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
    X
    தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அபிராமி நகரில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் திடீர் மழை- வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    • தென்காசியின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் மிதமான சாரல் மழை ஒரு மணி நேரமாக பெய்தது.
    • கடுமையான வெயில் மற்றும் புழுக்கத்தில் சிக்கி தவித்து வந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை திடீரென ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நெல்லை, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 19 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. நாங்குநேரியில் 2 மில்லிமீட்டரும், களக்காட்டில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென மேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்தது. மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.

    இரவில் தென்காசியின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் மிதமான சாரல் மழை ஒரு மணி நேரமாக பெய்தது. இதனால் கடுமையான வெயில் மற்றும் புழுக்கத்தில் சிக்கி தவித்து வந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகள் வறண்டுவிட்டதால், தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தென்காசியின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் போதிய தண்ணீர் இன்றி வறண்டே காணப்படுகின்றன.

    சிவகிரியில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அடவிநயினார் அணையில் 12 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடியில் வெப்ப சலனம் காரணமாக இன்று அதிகாலை 4 மணி முதல் திடீர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் கோடை வெப்பம் தணிந்து நகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.

    மேலும் தெருக்கள், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், ஜெயராஜ் ரோடு, பழைய மாநகராட்சி அலுவலக பகுதி, புது கிராமம் உள்ளிட்ட சில பகுதிகள் மற்றும் திருச்செந்தூர் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    மாவட்டத்தில் வேடநத்தம் மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகபட்சமாக 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கழுகுமலையில் 7 மில்லிமீட்டரும், தூத்துக்குடியில் 6.5 மில்லிமீட்டரும், கோவில்பட்டியில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டு தோறும் இந்த காலகட்டமானது உப்பு உற்பத்தி சீசன் காலமாகும். இந்த சமயத்தில் பெய்த திடீர் மழையால் உற்பத்தியாளர்கள் சற்று கலக்கம் அடைந்தபோதிலும், உப்பு உற்பத்திக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×