திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை தேடும் பணி 3-வது நாளாக தீவிரம்

கடந்த 5-ந் தேதி முத்துராஜ் தனது மனைவி, குழந்தையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார்.கண்காணிப்பு கேமிராவில் கிடைத்த காட்சிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
 கடத்தப்பட்ட குழந்தை ஸ்ரீஹரிஷ்
கடத்தப்பட்ட குழந்தை ஸ்ரீஹரிஷ்
Published on

திருச்செந்தூர்:

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ்.

இவர் தனது மனைவி ரதி மற்றும் 1½ வயது குழந்தை ஸ்ரீஹரிஷ் ஆகியோருடன் கடந்த 28-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து தங்கி விரதம் இருந்து வந்தார்.

அங்கு இவர்களுடன் தங்கியிருந்த 40 வயது பெண் ஒருவர் இவர்களுடன் நன்றாக பழகி நட்பாக இருந்துள்ளனர். கடந்த 5-ந் தேதி முத்துராஜ் தனது மனைவி, குழந்தையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அவர்களுடன் அந்த பெண்ணும் வந்தார்.

அந்த நேரத்தில் அந்த பெண், குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதாக கூறி நைசாக குழந்தையை கடத்தி சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இவர்கள் தங்கியிருந்த குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர்.

அதில் இவர்களுடன் அறிமுகமான பெண் மற்றும் ஒரு வாலிபர் இருவரும் திருச்செந்தூர் வந்து அங்கிருந்து குழந்தையை மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்லும் காட்சிகள் தெரியவந்தது.

மேலும் அந்த நபர் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் சுங்கசாவடியை தாண்டி மோட்டார் சைக்கிளில் குழந்தையை கடத்தி செல்லும் காட்சி பதிவானதை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து 3-வது நாளாக தேடி வருகின்றனர்.

குழந்தையை கடத்திய பெண்ணும், அவருடன் இருந்த வாலிபரும் தம்பதியா? அல்லது குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமிராவில் கிடைத்த காட்சிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com