என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புகையிலை புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார்: பாளை ஜெயிலில் இன்று போலீசார் அதிரடி சோதனை
    X

    புகையிலை புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார்: பாளை ஜெயிலில் இன்று போலீசார் அதிரடி சோதனை

    • மாநகர போலீஸ் கமிஷனராக சமீபத்தில் பொறுப்பேற்ற ராஜேந்திரன், அன்றைய தினம் முதலே அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
    • கைதிகளின் அறைகள், உணவு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட ஏராளமான அறைகளில் சோதனை செய்துனர்.

    நெல்லை:

    பாளை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என அடிக்கடி போலீசார் கைதிகளின் அறைகளில் சோதனை நடத்துவது வழக்கம். அதே நேரத்தில் கைதிகளால் செல்போன் பயன்படுத்தப்படுகிறதா? என்ற சோதனையும் அவ்வப்போது நடைபெறும்.

    இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனராக சமீபத்தில் பொறுப்பேற்ற ராஜேந்திரன், அன்றைய தினம் முதலே அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதாவது மாநகர பகுதியில் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மாநகர பகுதியில் சாகசம் நிகழ்த்தும் விதமாக மோட்டார் சைக்கிள்களில் செல்லும் வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் பாளை மத்தியச்சிறையில் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரையடுத்து அங்கு சோதனைகள் மேற்கொள்ள கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று காலை அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் உதவி கமிஷனர் பிரதீப், 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 47 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கைதிகளின் அறைகள், உணவு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட ஏராளமான அறைகளில் சோதனை செய்துனர்.

    சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×