search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின் வாரிய செலவுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணம்? விரைவில் அமலுக்கு வருகிறது
    X

    மின் வாரிய செலவுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணம்? விரைவில் அமலுக்கு வருகிறது

    • பொதுமக்களிடம் இருந்து மின் வாரியத்தில் மீட்டருக்கு மட்டும் தான் டெபாசிட் என்ற பெயரில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.
    • 3 மாத மின்சார கட்டணம் டெபாசிட் தொகையாக மின் வாரியத்தில் இருக்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    2 மாதத்துக்கு ஒருமுறை மின்சார ரீடிங் எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகமாக வருவதால் இதை மாதந்தோறும் கணக்கெடுத்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் மாதந்தோறும் மின்சார ரீடிங் எடுத்து கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதன்படி புதிதாக அறிமுப்படுத்தப்பட்டுள்ள மின்சார திருத்த சட்ட விதி 14ன் படி, மின் வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் அதை பொதுமக்களிடம் இருந்து கட்டணத்துடன் வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளித்து உள்ளது. இந்த விதி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதாவது வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வழங்கும் போது ஏற்படும் கூடுதல் செலவினங்களையும், மின்சாரம் தயாரிப்பதற்கு நிலக்கரி வாங்கும் போது ஏற்படும் கூடுதல் செலவினங்களை சரி கட்டவும் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    மாதந்தோறும் வசூலிக்க முடியாத சூழல் ஏற்படுமானால் ஆண்டுக்கு ஒரு முறை என்று கணக்கிட்டு அதை நுகர்வோரிடம் மின் வாரியம் வசூலிக்கவும் விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே மின்கட்டணம் அதிகமாக உள்ளது என்று மக்கள் புலம்பும் நேரத்தில் மின் வாரியத்தின் கூடுதல் செலவுகளையும் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று இப்போது கூறப்பட்டு உள்ளதால் மக்களுக்கு இது மேலும் அதிக சுமையாக அமையும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பொதுமக்களிடம் இருந்து மின் வாரியத்தில் மீட்டருக்கு மட்டும் தான் டெபாசிட் என்ற பெயரில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. அதாவது 3 மாத மின்சார கட்டணம் டெபாசிட் தொகையாக மின் வாரியத்தில் இருக்கும்.

    இந்த தொகை கூடும் போதும், குறையும் போதும் அதற்கேற்ப மின்வாரியத்தில் இருந்து நமக்கு தகவல் சொல்லி பணம் கட்ட சொல்வார்கள். ஆனால் இப்போது மின்வாரிய கூடுதல் செலவுகளையும் பொதுமக்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    இது பற்றி மின்வாரிய நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டதற்கு மின்சார திருத்த விதிகளில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது உண்மை தான். கூடுதல் செலவுகளை மக்களிடம் இருந்து பெறலாம் என அதில் கூறப்பட்டிருந்தாலும் அது கட்டாயம் கிடையாது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை அந்த விதி இப்போதைக்கு பொருந்தாது. ஒவ்வொரு ஆண்டும் கமிஷன் ஒப்புதல் அளித்தபடி பணவீக்கத்தின் அடிப்படையில் கட்டணம் உயரும். எனவே மின்வாரிய கூடுதல் செலவுகளை மக்களிடம் வசூலிக்கும் நிலை தமிழ்நாட்டில் கட்டாயமில்லை என்றார்.

    இதுபற்றி மின்வாரிய தொழிற்சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மின்சார வினியோகத்தை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் தனியாரிடம் கொடுக்க விரைவில் முடிவெடுப்பார்கள் என தெரிகிறது.

    அவ்வாறு தனியாரிடம் செல்லும் போது அவர்கள் செலவினங்களை வசூலிப்பதற்கு ஏற்ப இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மாதந்தோறும் செலவினங்களை வசூலிப்பதை இப்போது நடைமுறைப்படுத்தாவிட்டாலும் விரைவில் இது அமல்படுத்தப்படும் என்றே தெரிகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×