search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான மழை பெய்தது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்க உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மதியத்திற்கு பிறகு பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி ஆகிய இடங்களில் நேற்று மாலை முதல் இரவு வரையிலும் பலத்த மழை பெய்தது. இதேபோல் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 15.2 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 15 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாநகர பகுதியில் பாளை பகுதியில் 4.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை கொட்டியது. அங்கு நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 36 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது. காக்காச்சி முக்கில் 32 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    இன்னும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதால், அறுவடை செய்யும் நிலையில் நெற்பயிர்கள் ஏராளமான இடங்களில் உள்ளன. அதன் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். அணைகளை பொறுத்தவரையில் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    இதனால் அனைக்கு வினாடிக்கு 277.95 கனஅடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது அந்த அணையின் நீர்மட்டம் 77.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மாலையில் தொடங்கி சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இரவிலும் விட்டுவிட்டு பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    மாவட்டத்தில் செங்கோட்டை பகுதியில் மட்டும் 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணை பகுதிகளை பொறுத்தவரை குண்டாறு நீர்பிடிப்பு பகுதியில் 2 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 1.3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான மழை பெய்தது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 25.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கயத்தாறு, கடம்பூர், கழுகுமலையில் லேசான சாரல் மழை பெய்தது. கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×