search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா போட்டியிட்டால் டெபாசிட் இழக்கும்- அமைச்சர் பேட்டி
    X

    ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா போட்டியிட்டால் டெபாசிட் இழக்கும்- அமைச்சர் பேட்டி

    • பாரதிய ஜனதா ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அரசின் கட்டுப்பாட்டில் தான் கோவில்கள் உள்ளது.
    • குஜராத்திற்கு ஒரு நியாயம் , தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயம் என்று தான் பேசுவார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அறநிலையத் துறையை தனியார் மூலமாக செயல்படுத்துவோம் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. தமிழ்நாட்டில் இன்று அறநிலைய துறைக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

    அவை அந்தந்த கோவில்களுக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இன்னும் பல்வேறு கோவிலுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு உறுத்தலாகத் தான் இருக்கும்.

    பாரதிய ஜனதா ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அரசின் கட்டுப்பாட்டில் தான் கோவில்கள் உள்ளது. அப்படி இருப்பதில் ஒரு நியாயமும் உள்ளது. ஏனென்றால் தனியார் வசம் இருக்கும் போது பல்வேறு காலகட்டங்களில் நிர்வாக பிரச்சினைகள் ஏற்பட்டு ஒரு சாராருக்கான ஆலயங்களாக அது செயல்படும் நிலை உள்ளது.

    இதனால் சாதாரண மக்கள் வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதெல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்றால் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தான் ஆலயங்கள் இருக்க வேண்டும்.

    அனைத்து தரப்பினருக்கும் ஆலயங்கள் பொதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அறநிலையத்துறை அமைக்கப்பட்டது. அதன் செயல்பாடு தெரியாதவர்கள் தான் இவ்வாறு பேசுகிறார்கள்.

    தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகங்கள், திருப்பணிகள், அன்னதானங்கள் நடைபெற்று வருகிறது. இவையெல்லாம் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

    மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க கூடியவர்கள், தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி என்றுமே உண்மையை பேசுவதில்லை. குஜராத்திற்கு ஒரு நியாயம் , தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயம் என்று தான் பேசுவார்கள். அவர்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஏன் அறநிலையத்துறையை தனியார் கையில் கொடுக்க வில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா போட்டி யிட்டால், டெபாசிட் கூட கிடைக்காது. அதனால்தான் அங்கு போட்டியிட வேண்டிய தேவை இல்லை என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

    பி.பி.சி. நிறுவனம் ஒரு டாக்குமெண்டரி தயாரித்து அதை வெளியிட்டு உள்ளார்கள். பாரதிய ஜனதா உண்மையிலேயே நேர்மையாக இருந்தால் அவர்களே அதை எந்தவித தடையும் இல்லாமல் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வெளியிட வைத்து அதன் மீது ஆரோக்கியமான விவாதத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். அது உண்மையா? தவறா? என்பதை அவர்கள் தெளிவு படுத்தியிருக்க வேண்டும்.

    அந்த தைரியம் அவர்களுக்கு இல்லை. இன்று அவர்கள் ஓடி ஒளிவதைப் பார்த்தால், அதை தடை செய்ய முயற்சிப்பதை பார்த்தால் நமது ஊரில் சொல்வது போன்று எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும் பழமொழியை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    அந்த டாக்குமென்டரி அவர்களுக்கு மிகப்பெரிய அவலத்தை உருவாக்கும் என்பதற்காக அதனை இன்று தடை செய்துள்ளார்கள். இது மக்களுக்கு தெரியட்டும். அதை தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. அதில் எந்த தவறும் இல்லை. கவர்னர் தனது தவறுதலுக்கு மன்னிப்பு தெரிவித்து விட்டார். இப்போது அமைதியாக சென்று கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாடு வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். தற்போது அதை விட்டு விட்டார். சனாதனத்தையும் தற்போது அவர் பேசுவதில்லை. அனைவருக்கும் வாய்ப்பு உண்டு .அவருக்கு வாய் பூட்டு போட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

    எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. உச்சகட்ட பதவியில் இருப்பவர்கள் அந்த வரைமுறைக்கு உட்பட்டு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு பேசுவது அவர்களது பதவிக்கு அழகாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×