

சென்னை:
ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
அடுத்த ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவானது.
இது 23-ந்தேதி பருவ தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதியில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 3 நாட்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கக் கூடும்.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவக் கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையில் வலுக்குறைந்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.