search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்கள்
    X

    தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்கள்

    • காளைகள் மற்றும் வீரர்களின் திறமைகளை கூடியிருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
    • வீரர்களிடம் பிடிபடாமல் இருந்த காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், பாத்திரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் திருக்கானூர்பட்டி, திருமலைசமுத்திரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது.

    இன்று மாவட்டத்தில் 3-வது ஜல்லிக்கட்டு தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் நடைபெற்றது. லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடந்த ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் தஞ்சை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்திருந்தனர். முன்னதாக கோட்டாட்சியர் ரஞ்சித் ஜல்லிக்கட்டுக்கான விதிமுறைகளை உறுதிமொழியாக வாசிக்க அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து போட்டி தொடங்கியது. 12 சுற்றுக்களாக போட்டி நடத்தப்படுகிறது. முதலில் கோவில் காலை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்து வந்தன.

    அதனை தயாராக இருந்த வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு திமிலை பிடித்து கொண்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் அகப்படாமல் திமிறி சென்றன. இருப்பினும் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் காளையின் திமிலை பிடித்து அடக்கிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

    காளைகள் மற்றும் வீரர்களின் திறமைகளை கூடியிருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

    வீரர்களிடம் பிடிபடாமல் இருந்த காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், பாத்திரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் முட்டியதில் வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் பலத்த காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

    விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×