search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துறைமுகம்- மதுரவாயல் மேம்பால பணி ஜூன் மாதம் தொடங்குகிறது
    X

    துறைமுகம்- மதுரவாயல் மேம்பால பணி ஜூன் மாதம் தொடங்குகிறது

    • பறக்கும் சாலை திட்டத்தில் சிவனாந்தா சாலை முதல் கோயம்பேடு வரை இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைய உள்ளது.
    • கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன.

    கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி உயர்மட்ட மேம்பால கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு தடை விதித்தது.

    இந்த நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்த பின் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தத்தின்படி 20.56 கிலோ மீட்டர் நீளத்துக்கு துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் மேம்பால சாலை திட்டம் ரூ.5,862 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த பறக்கும் சாலை திட்டத்தில் சிவனாந்தா சாலை முதல் கோயம்பேடு வரை இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைய உள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் மேம்பால பணிகள் மே அல்லது ஜூன் மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சில அனுமதிக்காக காத்திருக்க வேண்டி உள்ளது.

    சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம் ரெயில் பாதையில் 2 பாலங்கள் கட்டப்படுவதற்கு தெற்கு ரெயில்வே அனுமதிக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காத்திருக்கிறது.

    இந்த திட்டத்துக்கான டெண்டர்கள் வருகிற 24-ந்தேதி திறக்கப்பட்டு மார்ச் 31-ந்தேதிக்குள் காண்டிராக்டரிடம் ஒப்பந்த கடிதம் வழங்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, 'பொறியியல் கொள்முதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒப்பந்ததாரருக்கு ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. அதன் பின்னர் வேலை தொடங்கப்படும். எனவே மே அல்லது ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்கும்' என்றார்.

    Next Story
    ×